Monday 12 August 2013

ஊடகங்களில் திருநங்கைகள் :



மதுரையில் 2 நாள் நடைப்பெற்ற திருநங்கையர் முப்பெரும் விழாவின் 2ம் நாள் நிகழ்வில் ஊடகங்களில் திருநங்கைகள் பற்றி என்னுடைய பதிவு :

திரு நங்கைகள், அரவாணிகள் என்று இன்று அறியப்படுகிற அல்லது அழைக்கப்படுகிறவர்களை நான் என் வாழ்வில் எந்த வயதில் முதன்முதலாக அறிந்து கொண்டேன், அல்லது எங்கே பார்த்தேன், அப்பொழுது எவ்விதம் உணர்ந்தேன் என்று நினைத்துப் பார்க்கிறேன்.

மனதில் பதிந்திருக்கும் திரைப்படக்காட்சி ஒன்றின் வழியேதான் நான் திரு நங்கைகளை நினைவு கூறுகிறேன்."கூவாத கோழி கூவுற வேளை, ராசாத்தி ராசன் வாராண்டி முன்னே..." என்று கோரஸ் பாடல் பாடியபடி கைதட்டி கும்மி கொட்டிய தோற்றமே நினைவில் உள்ளது.

திரைப்படத்தில் வட்டமடித்து கும்மி கொட்டிய அவைகள் யார், வித்தியாசமாக இருக்கிறார்களே என்கிற கவனம் ஏற்பட்டது. திரைப்படத்தின் கமர்ஷியல் வெற்றிக்கு பயன்படுத்திய உத்திப்பாடல் அது என்று அறியாத அந்தப்பருவத்தில் அந்த பாடல் வரிகளில் ஈர்ப்பு ஏற்பட்டது.

அதன்பிறகு பள்ளிப்பருவத்தில் விளையாட்டு வேளையிலோ வகுப்புப் பிரிப்பதற்கோ வரிசை எண் சொல்லும்பொழுது 1,2,3,..9 சொல்லும் வகுப்புத் தோழியைப் பார்த்து நமட்டு சிரிப்பு சிரிப்பது என்பதுதான் நான் அறிந்த 9 பற்றிய நையாண்டி தொனி. அடுத்ததாக கனகாம்பரப் பூ சூடிக்கொள்ளுதல், இடுப்பை ஒடித்து ஒடித்து நடப்பது, கன்னத்தில் இடித்துச் செல்வது என்பது அரவாணிகள் உடல் மொழி என சித்தரிக்கப்பட்டது தமிழ் சினிமா கலாச்சாரத்தில்தான்.

கிராமப்புறத்தையோ நகரத்தின் வாழ்வையோ அறியாத பால்யம் என்னுடையது . மக்கள் புழக்கம் குறைந்த மலைப்பிரதேசங்களில் நான் திருநங்கைகள் பற்றி அறிந்ததாக நினைவில் இல்லை . மேலும் இன்று போல மனதில் தோன்றும் எல்லாக் கேள்விகளையும் பெரியவர்களிடம் கேட்டு விட இயலாது . மனதில் எழும் சந்தேகம் பற்றி படித்தும் தெரிந்து கொள்ள இயலாத காலம் அது .
 

நர்த்தகி நடராஜ் பற்றி பத்திரிக்கையொன்றில் படித்தபோது தான் திருநங்கைகள் பற்றிய என் புரிதல் துவங்கியது. எனக்கு நாட்டியம் பிடிக்கும். பள்ளி நாட்களில் பரதம் பயின்ற பெண் என்கிற காரணத்தால் நர்த்தகி நடராஜ் மீது இயல்பாகவே ஈர்ப்பு வந்தது. பின்பு திருநங்கைகள் பற்றி தேடிப் படிக்கலானேன். திருநங்கை ரேவதி பற்றி கல்கி சுப்பிரமணியன் பற்றி,பாரதிகண்ணம்மா பற்றி, ப்ரியாபாபு பற்றி, மற்றும் லிவிங் ஸ்மைல் வித்யா பற்றியும் அறிந்து கொண்டேன்.

இங்கே,
சக்கிலியன் இன்ன வேலை செய்ய வேண்டும், செட்டியார் இன்ன வேலை செய்ய வேண்டும்,
நாயக்கர் இன்ன வேலை செய்ய வேண்டும், கள்ளர் இன்ன வேலை செய்ய வேண்டும்
என வேலை அடிப்படையிலேயே அறியப்பட்ட சாதி அமைப்பு மேல், கீழ் என சாதி அடிப்படையில் மனிதம் பகுக்கப்பட்டது.
வண்ணான் குடும்பத்துல பொறந்துட்டு படிக்க வந்துட்டாளா?
என்கிற அவமானப்படுத்தும் கேள்விகளைச் சுமந்து கல்வி கற்க வேண்டிய நிலை. இவ்வாறு சாதி கட்டமைப்பை உடைத்து பள்ளிகூடம் வருவதற்கே எத்தனை சமூக எதிர்ப்பைத் தாண்டி வரவேண்டியதாகி இருந்தது; இன்னும் இருக்கிறது.

அதேபோல பொம்பளயா பொறந்துட்டு இதச் செய்யலாமா, வேகமா நடக்கலாமா, படிக்கலாமா, நிறைய சாப்பிடலாமா, சத்தமா சிரிக்கலாமா... அப்படியான இவ்வளவையும் உடைத்து இந்தப் பெண்கள் தான் வெளியே வந்துவிட்டார்களா என்ன?

பெண்கள் செய்யும் வேலை இது இது என்று ஒதுக்கப்பட்ட இந்த சமூகத்தில் ஆண்கள் வாசல் தெளித்து பெருக்கிக் கோலம் போடுதல், சமையல் செய்தல் அவமானம், சாப்பிட்ட தட்டை எடுத்து வைத்தல், பாத்திரம் கழுவுதல் பெருத்த அவமானம் என்று இப்படி கற்பிதம் செய்யப்பட்டுள்ளது.

காதல் என்கிற சொல்லே பெரிய அசிங்கம், சாதிக் கட்டமைப்பை உடைத்து திருமணம் செய்து சேர்ந்து வாழ்தல் ஒன்றும் அத்தனை எளிதில்லை என்பது இன்று வரை நாம் அறிந்துகொண்டிருக்கிறோம்.

ஆண் அடையாளம், பெண் அடியாளம் முழுமையாக உள்ளவர்கள்தான் என்றபோதிலும் தலித்கள், பெண்கள், உடல் ஊனமுற்றோர்கள் இன்றளவும் ஒடுக்கப்பட்டவர்கள் தான் . இவர்கள் தங்களை நிரூபிக்க கூடுதலாய் உழைக்க வேண்டியிருக்கிறது. 


இந்நிலையில் மரபு ரீதியான இனப்பெருக்கத்தின் அடிப்படைத் தொடர்ச்சி எதுவும் இல்லாமலேயே திருநங்கைகள் தங்களுக்கென ஒரு சமூகத்தை, ஒரு குடும்ப அமைப்பை, சடங்கு முறையை வாய்மொழி மரபுவழியே பேணி வருகிறார்கள்.

பல்வேறு மதம், மொழி, இனம், சாதி அமைப்பு கொண்ட இந்திய நாட்டில் பாரம்பரியமாக கடைபிடிக்கப்படும் கலாச்சாரச் சடங்குகளின் முறைப்படுத்தலுக்கும் அரவாணிகள் தங்களைக் கட்டமைத்துக்கொள்ளுதற்கும் வேறுபாடு உள்ளது.

ஒரு சாதி, ஒரு மொழி, ஒரு நிலம் என்று இருந்தாலும் உட்பிரிவுகளின் கலாச்சாரத்தை புரிந்துகொள்வது சிரமம். அப்படியிருக்கையில் வேறுவேறு சாதி, வேறுவேறு இனம், வேறுவேறு மொழி மற்றும் வேறு பாலில் பிறந்து,மாற்று பாலின மன ஈர்ப்பு காரணமாக உடல் அமைப்பும் மாற்றம் பெற்றுள்ள திரு நங்கைகள் தங்களைக் கட்டமைத்து வளர்ந்து வந்துள்ளது எனபது அத்தனை எளிதான செயல்பாடு அல்ல .

அரவாணிகள் தினம் கொண்டாடப்படவும், அவர்களுக்கு குடும்ப அட்டை, அடையாள அட்டை பெறுவதற்கும், இடை நின்ற கல்வி பெறுவதற்கும், திரு நங்கைகள் நடந்து வந்த பாதை என்பது அவமானங்களும் வலிகளும் நிறைந்தது. தற்கால ஊடகங்களின் வழியாக தொடர்ந்து லிவிங் ஸ்மைல் வித்யா, ப்ரியாபாபு, பாரதிகண்ணம்மா, கல்கி சுப்பிரமணியன், நர்த்தகி நடராஜ் மற்றும் பலர் தங்கள் இருப்பை உலகத்திற்கு தெரியப்படுத்தி வருகிறார்கள்..இதன்மூலமே இந்த குறைந்தபட்ச அங்கீகாரம் கூட கிடைத்திருக்கிறது என்று சொல்லலாம்.

என் மகள் காவியாவின் வகுப்புத் தோழிகளுடன் நேற்று திரு நங்கைகள் குறித்து உரையாடினேன். திரு நங்கைகள் பற்றி தெரியுமா?", இது நான். "தெரியும் ஆன்ட்டி , ஒம்போது " இது அஃப்ரிதா. அவள் இதை சொன்ன அடுத்த கணமே, ஏய் அஃப்ரிதா அப்படி சொல்லக்கூடாது, தப்பு என கண்டிப்பு நிறைந்த குரலில் புனிதா கூறினாள். நான் திரு நங்கைகள் பற்றி என் பால்யத்தில் அறிந்ததற்கும், என் மகள் அறிந்து வைத்திருப்பதற்கும் வித்தியாசம் உள்ளது எனில் அது ஊடகங்களின் மூலமே சாத்தியமாயிற்று. இது சிறிய மாற்றமே எனினும் கவனிக்கத்தகுந்தது என்று நினைக்கிறேன். அடுத்து அவர்களிடம் நான் முன் வைத்த கேள்வி, திரு நங்கைகளைப் பார்த்தவுடன் என்ன நினைப்பீர்கள்? ஒருத்தி பாவம் என்றாள், இன்னொருத்தி பயம் என்றாள். திருநங்கைகள் பாவப்படவோ, பயப்படவோ வேண்டியவர்கள் அல்ல, அன்பு செய்யப்பட வேண்டியவர்கள் என்றேன் நான்.

மூளை வளர்ச்சி இல்லாமல் பிறந்த குழந்தைகளை 25, 30 வருடங்கள் அல்லது அதற்கு மேலும் சகிப்புத்தன்மையுடன் தாங்கிப் பராமரிக்கும் பெற்றோர்கள், ஒரு பாலில் பிறந்து மறுபால் ஏற்றுக்கொண்ட தங்கள் பிள்ளைகளைப் புறக்கணிப்பது எத்தனைக் கொடுமையான இருபுறமும் உளவியல் சிக்கல் மிகுந்த செயல்பாடு .

குடும்பத்தின் புறக்கணிப்பு காரணமாக தாழ்வுமனப்பான்மை, குற்ற உணர்வு இதனால் கல்வி தடைபடுதல் ஏற்படுகிறது. விளைவாக வேலைவாய்ப்பின்மை. பசியிலும் மனப்பிறல்விலும் பிச்சை எடுத்தல், பாலியல் தொழிலில் ஈடுபடுதல் போன்றவைகளினால் துயர்மிகுந்த வாழ்வை மேற்கொள்கிறார்கள் . சமயத்தில் பாலியல் பலாத்காரத்திற்கும் உட்படுகிறார்கள்.இதனால் உளவியல் அடிப்படையிலான கடும் மனநெருக்கடிக்கு ஆளாகி தற்கொலை முடிவெடுக்கிறார்கள் .

இந்த காற்றில் எத்தனை லட்சம் உயிர்கள் வாழ்கின்றன, இந்த நீரில் எத்தனை லட்சம் உயிர்கள் வாழ்கின்றன, இந்த நிலத்தில் எத்தனை லட்சம் உயிர்கள் வாழ்கின்றன. இவர்கள் வாழ இடமில்லையா?

திருநங்கை ஸ்வப்னா , திருநங்கை ரீமா போன்றோர் மைய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்துகிற தேர்வு எழுத இயலாமல் போனது, திரு நங்கை பாரதிகண்ணம்மா அரசியலில் அங்கீகாரம் பெறப் போராடுவது இவற்றிற்கு சட்டரீதியான அங்கீகாரம் கிடைக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை.
நன்றி .

No comments: